தொடர்ந்து உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி! கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள டொலர்
இந்த வருடத்தில் கடந்த 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காலகட்டத்தில், இலங்கை ரூபா பெறுமதி பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அதன்படி, 2023 மே 19 வரையான காலப்பகுதியில் ஜப்பானிய யென்னுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 24.1 சதவீதமாகவும், ஸ்டெர்லிங் பவுண்டுடன் ஒப்பிடும் போது 15.4 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை யூரோ நாணயத்திற்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 17.5 சதவீதமாகவும் , இந்திய ரூபாயுடன் ஒப்பிடும் போது 18.7 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் 2022 இல், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.