மதிப்பிழந்துள்ள பல நாடுகளின் நாணயங்கள்! இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையை வெளிப்படுத்திய அமைச்சர்
தற்போதைய டொலர் நெருக்கடியின் காரணமாக, இலங்கை ரூபா உட்பட உலகின் பல நாடுகளின் நாணயங்கள் டொலருக்கு எதிராக மதிப்பிழந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி வரிகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பலவீனமடைந்துள்ள நாணயங்கள்
மேலும் தெரிவிக்கையில், டொலர் நெருக்கடியை எதிர்கொள்ள உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்திய ரூபாய் 6.4%, நேபாள ரூபாய் 6.2%, இந்தோனேசிய ரூபாய் 5.2%, பிலிப்பைன்ஸ் பெசோ 4.7% மற்றும் தாய் பாட் 4% என்பன டொலருக்கு எதிராக பலவீனமடைந்துள்ளன, அதே நேரத்தில் இலங்கை ரூபாயும் 4.8% பலவீனமடைந்துள்ளது.
குறுகிய காலத்தில் நாட்டின் வாகனச் சந்தை திறக்கப்பட்டதன் காரணமாக, வாகன இறக்குமதிக்காக கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
நிலைமையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான சுங்க வரியை மூன்று மாத காலத்திற்கு உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வரி உயர்வு
இருப்பினும், இந்த வரி உயர்வு பொதுமக்களால் பயன்படுத்தப்படும் பொது வாகனங்களுக்குப் பொருந்தாது. அதன்படி, பேருந்துகள், சரக்குந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்த வரி உயர்வு செய்யப்படவில்லை.
வாகன இறக்குமதியை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்துவதன் மூலமும், எண்ணெய் நுகர்வைக் குறைப்பதன் மூலமும் நாட்டின் டொலர் கையிருப்பைப் பாதுகாத்து, அதன் மூலம் தற்போதைய நெருக்கடியை வெற்றிகரமாகச் சமாளிப்பதே இந்த முடிவின் முக்கிய நோக்கம் என சுட்டிக்காட்டியுள்ளார்.