இன்றும் தொடரும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது.
பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைச் செயற்படுத்தத் தவறியமையைக் கண்டித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடந்த 23ஆம் திகதி நாடு முழுவதும் 48 மணி நேர தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்கியது.
அரசியல் நோக்கங்கள் நிறைவேறாது
நேற்றுமுன்தினம் காலை 8 மணிக்கு அந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முடிவடைந்தது. அதன் பின்னர் வைத்தியசாலைகளில் தினசரி சிகிச்சைகள் வழக்கம் போல் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும், சுகாதார அதிகாரிகள் எழுத்துபூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களை முறையாகச் செயற்படுத்தத் தவறிவிட்டனர் எனக் கூறி, நேற்றுக் காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில் இந்தப் பணிப்புறக்கணிப்பின் ஒரு பகுதியாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துகளை வெளியில் உள்ள மருந்தகங்களில் வாங்குமாறு பரிந்துரைத்தல், தேவையான மருத்துவப் பரிசோதனைகளை வெளியில் உள்ள தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளுமாறு நோயாளிகளுக்குப் அறிவுறுத்துதல் போன்ற செயற்பாடுகளிலிருந்து விலகுவதற்கு மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, மனித உயிர்களுடன் விளையாட வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வங்கியின் அனைத்து பணத்தையும் வழங்கினாலும் கூட, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அரசியல் நோக்கங்கள் நிறைவேறாது என்று பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.