கருப்புப் பட்டி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள்
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் இளைய ஊழியர்கள் இன்று (25) காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை அரைமணிநேரம் பணியிலிருந்து விலகி, கருப்புப் பட்டி அணிந்து வைத்தியசாலை முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தபோராட்டம், (23) இரவு குடிபோதையில் இருந்த ஒருவர் வைத்தியசாலை வார்டு வளாகத்துக்குள் நுழைந்து ஒரு இளைய ஊழியரைத் தாக்க முயன்ற சம்பவத்தையடுத்து முன்னெடுக்கப்பட்டது.
தாக்குதல் சம்பவம்
குறித்த நபர் சம்பவத்திற்குப் பிறகு வைத்தியசாலையை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்ததாவது,

“சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்,” என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கூறுகையில், சம்பவத்தில் தொடர்புடைய நபர் மஸ்கெலியா டி-சைட் தோட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் (24) இரவு கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சந்தேக நபரை இன்று (25) ஹட்டன் நீதவான் முன் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கிடையில், சமீபத்தில் டயகம பிரதேச வைத்தியசாலையிலும் இதேபோன்ற தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
அந்த சம்பவத்தையடுத்து அங்கிருந்த வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் பல நாட்கள் சேவையில் இருந்து விலகியிருந்த நிலையில், (24) அன்று அங்குள்ள அன்றாட சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.