இலங்கையில் மக்கள் எதிர்நோக்கவுள்ள மற்றுமொரு நெருக்கடி
தாதியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து மருத்துவர்களும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரியவருகிறது.
எதிர்வரும் 21ம் திகதி அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கம் தேசிய சம்பளக் கொள்கையை மீறும் வகையில் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நேற்றைய தினம், தொழிற்சங்கப் போராட்டம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் தொடர்பில் நிறைவேற்று குழுவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் சில தரப்பினருக்கு சம்பள அதிகரிப்பு வழங்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவ்வாறு வழங்கினால் அது தேசிய சம்பளக் கொள்கையை மீறும் வகையில் அமையும் என சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
தேசிய சம்பள ஆணைக்குழுவின் பணிகளை மீளத் தொடங்குவதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மருத்துவ பணிப்பாளர்கள் மேற்கொண்ட தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் பெருமளவான பொது மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே குறித்த போராட்டம் தற்காலிகமாக முடிவிற்கு கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மருத்துவர்களும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவார்களாயின் அது பொதுமக்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி...
மருத்துவப் பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு




