சிகிச்சை நிலையத்தில் போதை மாத்திரைகளை விற்ற மருத்துவர் கைது
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போர்வையில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றுக்குள் போதை மாத்திரைகளை விற்பனை செய்தார் எனக் கூறப்படும் மருத்துவர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை வடக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை கொரகபொல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான மருத்துவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் பௌத்த விகாரைகளின் விகாராதிபதிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ லக்மாலின் ஆலோசனைக்கு அமைய ஒரு மாதத்திற்கு மேல் நடத்திய கண்காணிப்புகளை அடுத்து,பொலிஸ் பரிசோதகரின் உத்தரவுக்கு அமைய அதிரடிப்படையினர் மருத்துவ நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
பாணந்துறை பள்ளிமுல்ல பிரதேசத்தில் சந்தேக நபரான மருத்துவர் நடத்தி வந்த மருத்துவ நிலையத்தை நேற்றிரவு 7.30 அளவில் முற்றுகையிட்ட அதிரடிப்படையினர், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர்.
ஒரு போதை மாத்திரை 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகவும் இதனடிப்படையில், கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் முழுப் பெறுமதி சுமார் 40 லட்சம் ரூபாய் என பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் குறித்து பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
