அஸ்ட்ராசெனகா நிறுவனம் இலங்கையிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ள அஸ்ட்ராசெனகாவின் தடுப்பூசிகள் போலியானதாக இருக்கக்கூடும் என்பதால், எந்தவொரு தனியார் வர்த்தகர் அல்லது நிறுவனத்திடமிருந்தும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று அஸ்ட்ராசெனகா நிறுவனம் இலங்கையிடம் கோரியுள்ளது.
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு இது தொடர்பில் அஸ்ட்ராசெனகாவின் நிறுவனம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஏற்கனவே அஸ்ட்ராசெனகாவின் முதலாவது அளவை செலுத்திக்கொண்டவர்களுக்கு இரண்டாம் அளவைச் செலுத்துவதற்காக 6 இலட்சம் குப்பிகள் தேவைப்படுகின்றன.
எனினும் இந்தியாவில் கோவிட் பரவல் அதிகரித்தமையை அடுத்து சீரம் நிறுவனத்தினால் இலங்கைக்கு உறுதியளித்தப்படி இரண்டாவது அளவுக்கான அஸ்ட்ராசெனகா குப்பிகளை வழங்க முடியவில்லை.
இதனைடுத்து குறித்த காலப்பகுதிக்குள் இந்த தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்பதற்காக அதிக விலையில் தனியார் நிறுவனங்களின் கையிருப்புகளில் இருப்பதாக கூறப்படும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தயாரானதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்காக 15 க்கும் மேற்பட்ட உலகளாவிய தனியார் நிறுவனங்களுடன் இலங்கையின் அரசாங்க அதிகாரிகள் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மத்தியில் குறித்த தனியார் நிறுவனங்களிடம் இருந்த தடுப்பூசிகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்துக்கொள்ள, அரசாங்கம் அஸ்ட்ராசெனகா தாய் நிறுவனத்தை அனுகியது. இதனையடுத்தே அஸ்ட்ராசெனகா நிறுவனம் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவருக்கு கடிதத்தை அனுப்பியுள்ளது.
அதில் அஸ்ட்ராசெனகா நிறுவனம், சர்வதேச அமைப்புக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் விரைவில் தடுப்பூசிகளை வழங்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தனியாரிடம் இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று கோருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தடுப்பூசிகளை கிடைக்கச் செய்வதற்கு தற்போது கோவக்ஸ், யுனிசெப் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மட்டுமே தங்களால் நியமிக்கப்பட்ட பங்காளிகள் என்பதை அஸ்ட்ராசெனகாவின் நிறுவனம் தமது கடிதத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது.
இதேவேளை, அஸ்ட்ராசெனகாவின் இரண்டாவது அளவை செலுத்துவதற்கான அரசாங்கத்தின் தற்போதைய திட்டம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
பணம் படைத்தவர்கள், சட்டவிரோதமாக அவற்றைப்பெற்றுள்ளனர்.
அத்துடன் தடுப்பூசியின் முதல் அளவுக்கு ஏற்பட இரண்டாவது அளவுகளை
நிர்வகிப்பதற்கான நெறிமுறையை சுகாதார அமைச்சு தெளிவாக புறக்கணித்துள்ளது
என்றும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.