சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம்: வெற்றிலைக்கேணி கடற்படை அதிகாரி அறிவுறுத்தல்
வடமராட்சி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென வெற்றிலைக்கேணி கடற்படை அதிகாரி கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்றொழில் அதிகரித்துள்ளதால் சிறு தொழிலாளிகள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
சட்டவிரோத நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றனர்.
சட்டவிரோத நடவடிக்கை
இதன்போது கருத்து தெரிவித்த வெற்றிலைக்கேணி கடற்படை அதிகாரி, வடமராட்சி கிழக்கில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றெழிலை கட்டுப்படுத்த நாம் தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.

இவர்கள் பல்லாயிரக்கணக்கான மீன்களை அழித்து வருவதோடு ஏனைய கடற்றொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.
இவ்வாறு சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் போது கடற்படை தம்மை தாக்குவதாக பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை விரைவில் கட்டுக்குள் கொண்டு வருவோமெனவும் தெரிவித்துள்ளார்.