பல ஆண்டுகளுக்கு பின் கைதான கொலையாளி
15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் மரபணு பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எகலியகொட பலீகல பிரதேசத்தில் எகலியகொட பொலிஸாரினால் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில் வன்புணர்வுக்கு உள்ளான மாணவி
2009 ஆம் ஆண்டு எகலியகொட பொலிஸ் பிரிவில் கொஸ்கஹாமுகலான பிரதேசத்தில் பாடசாலை முடிந்து சீருடையில் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போது மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மாணவியை சந்தேக நபர் கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு அவிசாவளை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மரபணு பரிசோதனை
எனினும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் மரபணு மாதிரி சந்தேக நபரின் மரபணுடன் ஒப்பிட்டு பார்த்த போது அது ஒத்துபோயுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எகலியகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று அவிசாவளை மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.