மட்டக்களப்பு நகரில் கிராம சேவையாளர் பிரிவு ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
மட்டக்களப்பு நகரில் நேற்று ஐந்தாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ள நிலையில் அவரது குடும்பத்தில் உள்ள ஐந்து பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
நேற்று அரசடி சந்தை வீதியில் உள்ள வீட்டில் 79 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக முடக்கப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு பொதுச்சந்தை மூடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பொதுச்சந்தை மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், வீதி போக்குவரத்து அனுமதி வழங்கும் காரியாலயம் என்பனவற்றுக்கு செல்லும் வீதிகள் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 467ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.