முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக் கூட்டம்
முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்றையதினம் (25) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, மாவட்ட ரீதியில் சிறுவர்கள் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் துஸ்பிரயோகம், சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டன.
பாடசாலை மாணவர்களின் வரவு
மேலும் பாடசாலை மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை மற்றும் இடைவிலகல், மாணவர்களின் மீளிணைப்பு செயற்பாடுகள், அறநெறிக்கல்வி, சுகாதாரம் மற்றும் உணவு, பிறப்புச் சான்றிதழ் தொடர்பான நடவடிக்கைகள், சிறுவர் கழக செயற்பாடுகள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு செயற்பாடுகள், சிறுவர் தொழில்கள், பால்நிலை சார் வன்முறைகள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
மூன்றாம் நிலைக் கல்வி, பால்நிலை சமத்துவம், பிரசவத்தின் போது பிள்ளைகள், தாய்கள் இறப்பு தொடர்பான விடங்களை எவ்வாறு கட்டுப்படுத்தல், இளவயது திருமணத்தினை குறைத்தல் மற்றும் கண்காணித்தல் முதலான விடயங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு கலந்துரையாடப்பட்டன.
தொடர்ந்து சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு, தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெயக்காந் (காணி) , பிரதேச செயலாளர்கள், மாவட்ட உதவி செயலாளர் , உதவிப் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ உத்தியோகத்தர்கள், பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.










