யாழில் மாவை சேனாதிராஜா தலைமையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்(Eswarapatham Saravanapavan) ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவிட்டபுரம் மற்றும் தெல்லிப்பழையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று இரவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி மாவை சேனாதிராஜாவினால் பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
நினைவு கஞ்சி
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து நாளை, 16ஆம் திகதி வட்டுக்கோட்டை தொகுதியின் சங்கானை சித்தன்கேணி அராலி சுழிபுரம் பண்டத்தரிப்பு மூளாய் ஆகிய பகுதிகளிலும் 17ஆம் திகதி மாலை 3 மணியளவில் வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும் எனவும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு தமிழரசுகட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினர் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |