செங்கலடி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் பதுக்கல்! பிரதேச சபையில் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு - ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் அமர்வு இன்று பிரதேச சபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இன்று குறிப்பாக எரிபொருள் பதுக்கல் தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்திரன் இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்களோ சுனாமி கள்ளன், 10 பேசன்டேச் என சொல்லப்படுகின்ற அமைச்சரோ கொரோனா கள்ளன், பிரதமர் ஆனவரோ மத்திய வங்கி கள்ளன், அமைச்சர்கள் மாணவர்களோ சீனி கள்ளர் என பலவகையான இருக்கும்போது, அதன் கீழ் உள்ள அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் அதே வண்ணமாக இருந்து கொண்டு வருகின்றனர்.
எரிபொருள் வழங்குவதில் தடை
செங்கலடி எரிபொருள் கூட்டுறவு சங்கத்தின் கடமையாற்றும் முகாமையாளர் அவர்கள் இரவு வேளைகளில் மண்ணெண்ணெய் கலன்களை ஏற்றிச் செல்கின்றனர். அது தொடர்பாக அவரது பொது முகாமையாளரிடம் தெரிவித்த போது தகுந்த ஆதாரம் வேண்டும் என்றனர். ஆதாரங்களையும் காட்டினேன் நடவடிக்கை எடுக்கவில்லை.
எரிபொருள் வளாகத்தில் தினம்தோறும் மது அருந்துகின்றனர், அதுமாத்திரமின்றி அங்கு பாதுகாப்பு கடமையில் உள்ள இராணுவம் , பொலிஸ், மணல் மாஃபியா மற்றும் அங்குள்ள முகாமையாளர் ஆகியோர் இணைந்து இந்த கூட்டு தொழிலை செய்து வருகின்றனர்.
இது முற்று முழுதாக தடுக்கப்பட வேண்டும், இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும், அங்கு பாதுகாப்பு கடமையில் உள்ளவர்கள் தரகர் வேலையில் ஈடுபடுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தவிசாளர் சி.சர்வாணந்தன், இந்த விடயங்கள் தொடர்பாக நானும் அறிந்திருந்தேன், இவ்வாறான செயற்பாடுகளினால் விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் தடை ஏற்படுகிறது, இது தொடர்பாக நாம் விழிப்புணர்வுடன் செயற்படாவிடின் எமது அப்பாவி மக்களே பாதிப்படைவர் எனவும் தெரிவித்தார்.



