இலங்கையின் பல்வேறு குற்றச்செயல்களின் பின்னணி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் நடைபெறும் குற்ற செயல்களின் பின்னணியில் மோசடியான தொலைபேசி உரையாடல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கையடக்க தொலைபேசிகளில் இருந்து அழைப்புகளை மேற்கொள்ளும்போது, அழைப்பை எடுக்கும் உண்மையான தொலைபேசி எண்ணுக்குப் பதிலாக போலி எண்ணைக் காண்பிக்கும் தொழில்நுட்ப முறையொன்றை, குற்றக் கும்பல்கள் பயன்படுத்தி வருவதாக குற்ற புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இந்தத் தொழில்நுட்ப முறைமை பயன்படுத்தப்பட்டமை குறித்த தகவல்கள், முதன்முதலில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னரே அம்பலமாகி உள்ளது.
வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் என்ற தலைப்பின் கீழ், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திரநாயக்கவினால அனுப்ப்பட்ட கடிதத்தில் இந்த மோசடி முறைமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் 39 கையடக்க தொலைபேசி எண்களிலிருந்து மேற்கொண்ட அழைப்புகளின் போது, தங்களின் உண்மையான எண்களை மறைத்து இவ்வாறு போலி எண்களைக் காண்பித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உளவுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளின் போதும் இதுகுறித்த மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொலைபேசி அழைப்பு
சுரேஷ் சலே மேற்கொண்ட அழைப்புகளுக்குரிய தொலைபேசி எண்களுக்கு மீண்டும் அழைப்பினை ஏற்படுத்த முடியாது என இராணுவ உளவுத்துறையுடன் தொடர்புடைய தகவல் வழங்குநர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போலி எண்களைக் காட்டி தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் இந்த முறைமை குறித்து பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளதால், குற்றக் கும்பல்களின் தொலைபேசி அழைப்புகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.