அவுஸ்திரேலியர்கள் மீதான வெளிநாட்டு பயணத்தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கோவிட் பரவலையடுத்து அவுஸ்திரேலியர்கள் எவரும் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதவாறு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பெடரல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Highlights அவுஸ்திரேலியர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Lobby group LibertyWorks இது குறித்த வழக்கினை தாக்கல் செய்திருந்தது. அரசுக்கு ஏற்பட்ட சட்ட செலவீனங்களையும் LibertyWorks செலுத்த வேண்டுமென தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழலில் நியூசிலாந்து தவிர(அவுஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற பயண ஏற்பாடு நடைமுறையில் உள்ளது) வேறு நாடுகளுக்கு அவுஸ்திரேலியர்கள் பயணம் செய்ய வேண்டுமெனில் உள்துறை அமைச்சிடமிருந்து அனுமதி பெறவேண்டும். இந்நடைமுறை கடந்த ஆண்டு மார்ச் முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பின்னணியில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட இக்கட்டுப்பாடானது தனிநபர் உரிமையை மீறும் செயல் எனவும், இக்கட்டுப்பாடு செல்லுபடியற்ற ஒன்று எனவும் தெரிவித்து Lobby group LibertyWorks நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
கடந்த ஆண்டு இறுதியில் குறித்த அமைப்பின் பணியாளர் ஒருவருக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பெடரல் நீதிமன்றம் இதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளதுடன், இவ்வழக்கு காரணமாக அவுஸ்திரேலியா அரசுக்கு ஏற்பட்ட செலவினை LibertyWorks செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.