வவுனியா எல்லப்பர்மருதங்குளம் கிராமத்தில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு
வவுனியா, எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் மூவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதையடுத்து கிராமத்தில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா சுகாதாரப் பிரிவினரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையும் இணைந்து இச் செயற்பாட்டை இன்று (19.05) முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாகக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் மரணமடைந்திருந்தார்.
அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் எல்லப்பர்மருதங்குளத்தைச் சேர்ந்த மூவர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கிராமத்தில் கோவிட் தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் முகமாகக் கிராமத்தின் கிராம அலுவலர் அலுவலகம், பொதுநோக்கு மண்டபம், தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்களின் வீடுகள், சனம் கூடும் இடங்கள், வியாபார நிலையங்கள் என்பவற்றுக்குத் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன், குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய வீடுகளும் இதன்போது
தனிமைப்படுத்தப்பட்டதுடன், கோவிட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் வவுனியா தெற்கு பிரதேச சபையால் கிராமத்தில் ஒலிபெருக்கி மூலம்
மக்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.




