பொதுச்சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பருத்தித்துறை வர்த்தகர்களுடன் கலந்துரையாடல்
பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை வர்த்தகர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொதுச்சுகாதார நடைமுறைகள், உணவுச் சட்டங்கள் தொடர்பில் உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்கள், பழக்கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளின் உரிமையாளர்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் கோரிக்கை
பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் குறித்த கலந்துரையாடல் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்றைய தினம் (09) வியாழக்கிழமை பி.பகல் 3.00 மணிக்கு நகரசபை மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது.

இதன்போது உணவுச் சட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கு விதிகள், வர்த்தக நிலையங்களில் பேணப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் பங்கேற்று தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.
அத்துடன் வியாபார உரிமம் மற்றும் இயைபுச்சான்றிதழ் உள்ளிட்ட நகரசபையுடன் தொடர்புபட்ட கருத்துகள் நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலினாள் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விசேட கலந்துரையாடலில் பருத்தித்துறை வர்த்தகர் சங்க தலைவர் இரா.மயூதரன், செயலாளர் சி.சிறீபிரகாஸ், பொருளாளர் த.ஆதித்தன் உள்ளிட்ட வர்த்தகர் சங்க நிர்வாகத்தினர், நகரசபை உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் பங்கேற்றிருந்தனர்.

