தேர்தல்கள் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் குறித்து பங்குதாரர்களுடனான விசேட கலந்துரையாடல் (PHOTOS)
தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2022 - 2025 ஆண்டுகளுக்கான பங்களிப்பு மூலோபாயத் திட்டத்தினை உருவாக்கல் தொடர்பாக பங்குதாரர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.வீ.எம்.சுபியான் தலைமையில் இன்று (10) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஆரம்பகட்ட கலந்துரையாடலிற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந் கலந்துகொண்டதுடன், குறித்த விடயம் தொடர்பில் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.
குறித்த கலந்துரையாடலின் போது தேர்தல் சட்டம் மற்றும் ஒழுங்கமைப்பு தொடர்பாகவும், எதிர்காலத்தில் வாக்காளர்களை எவ்வாறு விழிப்புணர்வூட்டுதல், தேர்தல் கண்காணிப்பாளர்களது செயற்பாடுகள், வாக்காளர் பதிவு தொடர்பில் ஏற்பட்ட இடர்பாடுகள் தொடர்பாகவும், தேர்தல் காலத்தில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிரச்சாரத்திற்காக செலவழிக்கும் நிதி, தேர்தல் முடிவுகள் தொடர்பில் பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்பவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், வாக்களிப்பு வீதத்தினை அதிகரிப்பதற்கு எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளல் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்களிப்பு வீதம் 2.5 வீதத்தினால் கடந்தகாலங்களில் அதிகரித்துள்ள போதும் இதனை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு ஊடகங்களின் வகிபாகம், 2015 - 2020 வரையான மூலோபாய திட்டம் தொடர்பான சாதக பாதக தன்மை, வாக்காளர் இடாப்பு பதிவு, தேர்தல் நடவடிக்கையின் போது இனங்காணப்பட்ட விடயங்களும் அவற்றுக்கான தீர்வு, தேர்தல் கால பிரச்சார யுக்திகள், வாக்காளர் கல்வி மற்றும் இலத்திரனியல் வாக்கெடுப்பு தொடர்பாகவும் இந்த மூலோபாய திட்டம் தொடர்பாக பங்காளர்களுடன் ஆராயும் கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டிருந்தது.
மேலும், பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதுடன், இவற்றில் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களை தேர்தல் ஆணைக்குழு செயற்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜனநாயக நாடொன்றில் மக்கள் விருப்பும் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றினை நடாத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 2022 - 2025 ஆண்டுகளுக்கான பங்களிப்பு மூலோபாயத் திட்டத்தினை உருவாக்கல் தொடர்பான பங்குதாரர்களுடனான கலந்துரையாடல்கள் நாடளாவிய ரீதியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.






