முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்(Photos)
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணெய் இன்மையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளதாக வடமாகாண ஆளுநரின் பொதுசன தொடர்பு அதிகாரி ரி.கணேசநாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் இன்று(8) மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரதிநிதிகளின் கோரிக்கைகள்
மேற்படி கலந்துரையாடலில், இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளினால் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், இறங்கு துறைகளுக்கு செல்கின்ற பாதைகள் சீரின்மை, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், மற்றும் எரிபொருள் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படுள்ளது.
இதன்போது மண்ணெண்ணெய் மானிய அடிப்படையில் வழங்கப்பட வேண்டும், நந்திக்கடல் களப்பு ஆழமாக்கப்பட வேண்டியதன் அவசியம், தொழில் பாதிப்படைபவர்களுக்கு வாழ்வாதார
உதவிகள் மற்றும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள்
இதேவேளை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணெய் இல்லாத நிலையில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்தொழில் அமைச்சர் அவ்வப்போது மண்ணெண்ணெய் பெற்றுத்தருவதாகவும் வாழ்வாதாரம் வழங்குவதாகவும் வாக்குறுதிகளை வழங்கினாலும் அவை வெறும் வாக்குறுதிகளாகவே காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் அமைப்புக்கள் தங்கள் நிலையினை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஊடாக தெரிவித்துள்ளனர்.
பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை
இதன்போது குறித்த பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் வடமாகாண ஆளுநரின் பொதுசன தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் சி.சர்மினி,
கடற்தொழில் வள மாவட்ட உத்தியோகத்தர் றமேஸ் கண்ணா, மாவட்ட செயலக தகவல்
தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் யோ.மதுசூதன், மாவட்ட கடற்தொழில் வள
அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்தொழிலாளர் சமாச மற்றும் சங்கங்களின்
பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.



