பொதுப் போக்குவரத்தை சீரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்
பொதுப்போக்குவரத்தினை கல்முனை மாநகரத்தினுள் சீரமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.இப்னு அன்சார் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
விரிவான ஆராய்வு
இதன்போது கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு வீதிகளில் உள்ள அனுமதியற்ற வியாபார கொட்டில்கள், பாதை இரு மருங்குகளில் அமைந்துள்ள தற்காலிக கடைகள் மற்றும் பாதுகாப்பு அற்ற முறையில் வீதியில் வைத்து விற்பனை செய்கின்ற நபர்கள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டன.
குறித்த பொதுப் போக்குவரத்து கல்முனை மாநகரில் சீரின்மை கட்டாக்காலிகளின் தொல்லை தொடர்பில் தொடர்ந்தும் பொதுமக்களாலும் முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளன. இது தவிர பாடசாலை அதிபர்களாலும் இது சம்பந்தமாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் இவ்விடயம் சம்பந்தமாகவும் உரிய வியாபாரிகளிடம் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து இவற்றை அகற்றும் முன் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் என்பன இக்கலந்துரையாடலில் முன்னெடுக்கப்பட்டன.
கலந்து கொண்டவர்கள்
இதன்போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மற்றும் நிர்வாகப்பிரிவு உள்ளிட்ட பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக், சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான வாஹிட், மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி.நஸீர், சுற்றுச் சூழல் பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான எம்.ரி.எம்.நஜீம் உள்ளிட்டோர் பொலிஸ் தரப்பில் கலந்து கொண்டனர்.
அத்துடன் குறித்த விடயங்களை ஆராயும் பொருட்டு கல்முனை மாநகரசபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான், கல்முனை உப பிரதேச செயலகத்தின் கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அமலதாசன், வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைககள அதிகாரிகள், கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை சார்பான அதிகாரிகள், சுகாதார பிராந்திய அதிகாரிகள், கரையோரம் பேணல் அபிவிருத்தி உத்தியோகத்தர், கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

தமிழ்நாட்டில் கூலி இதுவரை செய்துள்ள வசூல்.. அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முறியடிக்குமா Cineulagam
