மாங்குளத்தில் அமைய உள்ள முதலீட்டு வலயத் திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மாங்குளத்தில் அமைய உள்ள முதலீட்டு வலயத் திட்டத்தை துரிதப் படுத்தி முன்னெடுக்கும் நோக்கத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் முதலாவது வழிகாட்டல் குழுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (03) நடைபெற்றது.
முதலாவது வழிகாட்டல் குழு கூட்டத்தில், இந்த வழிகாட்டல் குழுவின் இணைத் தலைவர்களாக வடக்கு மாகாண ஆளுநர், முதலீட்டுச் சபையின் தலைவர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட் கட்டுமான அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவி வழியாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
தொடர் நடவடிக்கை
அத்துடன், எதிர்கால முதலீட்டு திட்டங்களை முன்னெடுப்பதற்கான முதற்படியாக வடமாகாண சபையின் பிரதம செயலாளர் தலைமையில் தொழில்துறை முதலீட்டு மேம்பாட்டு அலகை ஆரம்பித்து தொடர் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் குழுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். முதலீட்டு வலயத்துக்கான செயற்றிட்ட அறிக்கையும் பகிரப்பட்டது டன் இறுதித் திட்ட அறிக்கை விரைவில் தேசிய திட்டமிடல் திணைக்களத்துக்கு வழங்கப்படும் எனவும் இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட காணி அளவீட்டு பணிகள் மற்றும் ஏற்கனவே செய்யப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை மீள் மேற்பார்வை செய்யப்படுவதுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தலைமையில் விரைவாக காணி சார்ந்த விடயங்களை தீர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்ட அமர்வுகள்
அத்துடன் கூட்ட அமர்வுகள் பற்றித் தீர்மானிக்கப்பட்டது டன் இச் செயற்திட்டத்தின் போது வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கும் செயன்முறையை விரைவுபடுத்தி மாகாணத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் இணைந்து செயற்படுமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.
ஐக்கிய நாடுகள் தொழில்துறை அபிவிருத்தி நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட் கட்டுமான அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் செயலாளர்கள், தென்னை அபிவிருத்திச் சபையின் தலைவர், நகர அபிவிருத்தி சபையின் உதவிப் பணிப்பாளர், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள், வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்கள பிரதிநிதிகள், யாழ் வர்த்தக தொழில்துறை மன்ற நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



