மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா குறித்து கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெறவுள்ள நிலையில் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை 11.30 மணியளவில் மடு திருத்தலத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பிரதேச செயலாளர்கள்,நானாட்டான் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள், இராணுவம்,கடற்படை,பொலிஸ் அதிகாரிகள்,வைத்தியர்கள்,சுகாதார துறையினர், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகள்
இதன்போது மடு திருத்தலத்தில் ஆவணி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தர உள்ளதாக எதிர் பார்க்கப் பட்டுள்ள நிலையில் வருகை தரும் மக்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு முன்னெடுக்க வேண்டிய அவசிய தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக மடு திருவிழா காலப்பகுதியில் பாடசாலைகள் விடுமுறை என்பதால் இலட்சக்கணக்கான மக்கள் தற்போது மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் திருவிழா நாட்களில் மக்களின் வருகை அதிகரிக்கக்கூடும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து,சுகாதாரம்,மருத்துவம்,தங்கும்இடம்,குடி நீர்,மின்சாரம் மற்றும் பாதுகாப்பு விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் மடு திருத்தலத்திற்கு திருவிழா காலப்பகுதியில் வருகை தரும் ஒருங்கிணைக்கப்பட்ட திருடர்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பிச்சையெடுப்போர் தொடர்பாகவும் விசேட கவனமெடுத்து அதனைத் தடுப்பதற்குரிய விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.


