பன்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்கல் நடவடிக்கையில் பாரபட்சம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்கல் நடவடிக்கையில் பாரபட்சம் காட்டப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara ) குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் கலைந்துள்ள உள்ளூராட்சி சபைகளை மீள செயற்படும் வகையில் அரசாங்கம் திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிதி வழங்கல்
“அரசாங்கத்தினால் நிதி வழங்க முடியாது என்பதனால் உள்ளூராட்சித் தேர்தல் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமையில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு- செலவு வேலைத்திட்டத்திற்கமைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஜுலை 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறு சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டே இது செய்யப்படுகின்றது. இதன்போது எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி வழங்கப்படாது.
இதேவேளை உள்ளூராட்சி அதிகார எல்லைப் பிரதேசங்களுக்கு ஆலோசனை குழுக்களை அமைக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பழைய உள்ளூராட்சி, நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலைமையில் மீண்டும் செயற்படச் செய்து அரசாங்கத்தின் உள்ளூராட்சித் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் ஊடாக வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இதன்மூலம் திட்டமிடப்படுகின்றது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |