ஆண்டான்குளம் கிராமத்தின் குறைபாடுகள் குறித்து ரவிகரன் எம்.பி ஆராய்வு
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட ஆண்டான் குளம் கிராமத்தின் குறைபாடுகள் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த விஜயம் இன்றையதினம்(10.12.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆண்டான்குளம் கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் அங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில் தற்போது வரையில் அவர்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை.
விவசாய நடவடிக்கை
இருப்பினும் அங்குள்ள தமது விவசாய நிலங்களில் தமிழ்மக்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், கால்நடைவளர்ப்பு, நன்னீர் மீன்பிடி போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் குறித்த பகுதியில் விவசாய, கால்நடைவளர்ப்பு, நன்னீர்மீன்பிடி போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் மக்களுடைய இடர்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேட்டறிந்தார்.
குறிப்பாக குமுழமுனை நாகதம்பிரான் ஆலய சந்தியிலிருந்து, ஆண்டான்குளம் ஐயனார் கோவில்வரையிலான வீதி மற்றும், குறித்த வீதியில் இருக்கும் இரண்டு பாலங்கள் சீரின்றிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |