முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு நேரடி அழுத்தம் கொடுக்கவேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை (Video)
மாகாண சபைகளுக்கான முழுமையான அதிகாரப் பகிர்வு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா நேரடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தனது கரிசனைகளை வெளியிட்டுள்ளதுடன், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இலங்கை அரசாங்கம்
நாம் சமஷ்டி தீர்வுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் அதேசமயம், சட்டபூர்வமாக எமக்குக் கிடைத்திருக்கக்கூடிய அதிகாரங்களை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா கோருவது வரவேற்கக்கூடிய ஒரு விடயம்.
இந்த ஆண்டு ஆரம்ப காலகட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி ஆகியவை.
ஒன்றிணைந்து 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இந்தியா உதவ வேண்டும் என்று கோரியிருந்தோம். அதனை ஏற்றுக்கொண்டு இந்திய அரசும் ஐ.நா. மனித உரிமைகள், பேரவையினூடாக மிகத் தெளிவாக சில விடயங்களைக் கூறியுள்ளது.
13ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும். இலங்கை அரசாங்கம் அது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
பொருளாதார பிரச்சினைகள்
பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு முன்னேற்றம் காணப்படவேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்று இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
அண்டை நாட்டுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இலங்கைக்கு இந்தியாவால், பல்வேறுபட்ட உதவிகள் கிடைத்து வருகின்றன. அதேசமயம், இலங்கையில் ஒரு நிரந்தரமான அமைதி, சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், ஈழத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதிலும் இந்தியா கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது.
எட்டுக் கோடி தமிழ் மக்களை உள்ளடக்கி 130 கோடி மக்களையுக் கொண்ட எமது, அண்டைநாடான இந்தியாவை எமது நட்பு சக்தியாக வைத்திருப்பதன் ஊடாகவே, தமிழ் மக்களுக்கு அரசியல் பொருளாதார ரீதியாக ஒரு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும்.
தேசிய இன விடுதலைப் போராட்டம்
எமது தேசிய இன விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தமில்லாதவர்களும் போராட்டத்தின் உண்மையானதும் முழுமையானதுமான வரலாறு தெரியாதவர்களும், பிராந்திய உலக அரசியலை சரியாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ளாதவர்களும், இந்தியாவை குற்றம் சாட்டுவதும் இந்தியா தமிழ் மக்களுக்கு விரோதமாக நடக்கின்றது என்று பேசுவதும் அர்த்தமற்ற, பொறுப்பற்ற, விஷமத்தனமான குற்றச்சாட்டுகளாகும்.
எமது உரிமைகளை வென்றெடுக்க எமக்குப் பலமான ஒரு சக்தியின் ஆதரவு தேவை. அது எமது அண்டை நாடான இந்தியாவைத் தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது.
இந்தியா தனது பாதுகாப்பின் மீது அதிக கரிசனை கொண்டிருக்கும் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் நலன்களைக் காத்துக்கொண்டு தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதிலும் இலங்கை அரசாங்கத்துடன் நட்புறைவைப் பேணவேண்டும் என்பதிலும் இந்தியா கரிசனையுடன் இருக்கின்றது.
இந்திய மற்றும் இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அது உருவாகியபோது உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா நேரடியாக இலங்கையுடன் பேசி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஈழத் தமிழர்களின் சார்பாக வேண்டி நிற்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.





இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
