ரணிலை ஜனாதிபதி நாற்காலியில் அமர்த்திய சிங்கள இராஜதந்திரம்
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பாரதூரமான பொருளாதார நெருக்கடி இலங்கை ஜனாதிபதியையும், பிரதமரையும் பதவிவிலகச் செய்யும் அளவுக்கு மோசம் அடைந்துள்ளது.
ஆனால் ஜனாதிபதியின் பதவிவிலகலும் அந்த ஜனாதிபதி வெற்றிடத்தை நிரப்புவதற்கான தேர்தலும் பெரும் அரசியல் அதிசயம் ஒன்றை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றது.
சிங்கள இராஜதந்திரம்
சிங்கள இராஜதந்திரம். ரணில் விக்ரமசிங்கவால் ஜனாதிபதி நாற்காலியில் எப்படி அமர முடிந்தது? தன்னைச் சூழ்ந்த அனைத்து எதிரிகளையும் தனக்கு சேவகம் செய்யும் இராஜதந்திர வியூகத்தை இந்த கிழட்டுச் சிங்கத்தால் எப்படி நடத்திக் காட்ட முடிந்தது?
சாணக்கியன் உயிரோடு இருந்திருந்தால் இத்தகைய மெருகான சிங்கள இராஜதந்திரிகளிடம் அவர் இராஜதந்திர பயிலத் துணிந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இங்கு தனது மாமனாரா ஜேஆர் ஜெயவர்த்தன என்ற குருவை மிஞ்சிய சிஷ்யனாக ரணில் இலங்கை அரசியலில் வீற்றிருக்கிறார் என்று சொல்வது தான் பொருத்தமானது.
சுதந்திரத்திற்கு பின்னான இலங்கையின் அரசியல் வரலாற்றில் மூன்று குடும்பங்களின் ஆட்சியே இலங்கையில் மாறிமாறி வந்திருக்கிறது. இந்த மூன்று குடும்பம் என்பது டி.எஸ் சேனநாயக குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம் இராஜபக்ச குடும்பங்கள்.
வாரிசு பிரச்சினை
டி எஸ் சேனநாயக்கவின் குடும்ப அரசியலின் இறுதி வேர் தான் ரணில். டட்லி சேனாநாயக்கவுக்கு வாரிசு இன்மையாலும் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கவுக்கு வாரிசு இன்மையாலும் ரணிலுக்குப் பின் டி .எஸ் சேனநாயக்க பரம்பரையின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும். அவ்வாறே பண்டாரநாயக்க குடும்பத்திலும் அனுர பண்டாரநாயாக்காவுக்கு வாரிசு இன்மையினால் அந்தக் குடும்பத்தின் ஆட்சியும் முடிவுக்கு வருகிறது.
ஆனால் பண்டாரநாயக்க குடும்ப கட்சியின் அரசியலுக்குள்ளால் புதிய குட்டியாக முளைத்த ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் தற்போது நிலைக்கிறது. ஆகவே இன்றைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும ஆகிய இரு குடும்ப அரசியற் தொடர்ச்சியுடன் கூடவே போட்டியிடும்.
அனுரகுமார திஸாநாயக்க இடதுசாரி சக்திகளின் ஒருநூற்றாண்டுத் தொடர்ச்சியாவார். இதன் மூலம் இலங்கையில் குடும்ப ஆதிக்க அரசியல் தொடர்ச்சியின் வேர்கள் இன்னும் அறுந்துபோகவில்லை என்பதனை இந்தத் தேர்தல் வெளிகாட்டி நிற்கின்றது.
ரணில் விக்ரமசிங்க ஜேஆர் ஜெயவர்த்தனவின் பள்ளியில் பயின்றவர் என்பதை நிரூபித்திருக்கின்றார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் தேசிய பட்டியல் ஊடாக அதற்கு ஒரு ஆசனம் கிடைத்தது.
அந்த ஆசனத்தை தான் ரணில் விக்ரமசிங்க திருடித் தனதாக்கிக் கொண்டார். இலங்கையின் வரலாற்றில் குறைந்த வயதில் அதாவது 29 வயதில் அமைச்சராக பதவி வகித்த அணில் விக்ரமசிங்க டி. எஸ் .சேனநாயக்க குடும்பத்தின் இறுதி வாரிசாக நிற்கிறார்.
அரசியலில் தோல்வியடைந்த தலைவர்
அரசியலில் தோல்வியடைந்த தலைவராகவும், கட்சியை வழிநடத்த முடியாத தலைவராகவும் விழுந்துகிடந்த ரணில் விக்ரமசிங்க சினம் கொண்ட சிங்கம் போல வீறுகொண்டெழுந்து இன்று இலங்கை ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
இந்த அதிசயத்தை அவருடைய மதிநுட்பமான ராஜேந்திர வியூகம் நடத்தி காட்டி இருக்கிறது. கவனிப்பாரற்றுக் கிடந்தவர் பொருளாதார நெருக்கடியின் போது துணிந்தெழுந்து பிரதமர் பதவியை பொறுப்பேற்றார்.
தாழுகின்ற கப்பலின் மாலுமியாகப் பொறுப்பேற்க எதிர்க்கட்சித் தலைவர் பின்னடித்தபோது துணிந்து முன்வந்து நின்று அந்தப் பொறுப்பை ரணில் ஏற்றார். அந்தப் பொறுப்பு ஏற்றவுடன் அவருடைய இராஜதந்திர மூளை அதிவேகமாக செயல்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
ராஜேந்திரம்
ராஜேந்திரம் எனப்படுவது தான் எதை விரும்புகிறானோ அதை எதிரியை கொண்டு செய்ய வைப்பது. எதிரியை தனக்கு சேவகம் செய்ய வைப்பது. அந்த ராஜதந்திர வித்தையை அரசியலில் 1987 ஆம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்த்தன இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை உருவாக்கி தனக்கு எதிராக இருந்த இந்தியாவையும் எதிரியான புலிகளையும் ஒரு மேசையில் அமர்த்தி பின் அந்த இருவரையும் மோதவிட்டு உடையவிருந்த இலங்கையை காப்பாற்றியது மட்டுமல்ல தமிழர்களை இந்தியாவின் நிரந்தர பகையாளியாக மாற்றுவதிலும் வெற்றி பெற்றார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு அத்திவாரம் இட்டுக் கொடுத்தவர் ஜேஆர் தான். அந்த அத்திவாரத்தின் மீது தான் முள்ளிவாய்க்கால் படுகொலை ராஜபக்சக்களால் நடத்த முடிந்தது. அதே வாழையடியில் வழிவந்த ரணில் விக்ரமசிங்க தன்னுடைய யுஎன்பி கட்சியின் பிரதான எதிரியான சுதந்திரக் கட்சியினாலும் சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்த பொதுஜன பெரமுனவினாலும் தோற்கடிக்கப்பட்டார்.
இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாக உடைத்த சஜித் பிரேமதாசவினால் ரணில் விக்ரமசிங்கவை அரசியலில் நிமிர முடியாத இடத்துக்கு தள்ளிவிட்டார். இவ்வாறு அரசியலின் அதளபாதாளத்தில் விழுந்துகிடந்த ரணில் விக்ரமசிங்கவை பொருளாதார நெருக்கடியும், கொழும்பு கிளர்ச்சியும் அவரை மீண்டெழுவதற்கான ஒரு துரும்பை கொடுத்தது.
எதிர்பார்க்காமல் கிடைத்த ஒரு சிறிய துரும்பை கெட்டியாக பிடித்து மேல் எழுந்து இன்று சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்றால் அது அவருடைய அரசியல் சாணக்கிய தந்திரத்தின் உச்சத்தை வெளிக்காட்டுகிறது.
முட்டி மோதிய உள்ளக,வெளிநாட்டு அரசியல்
இந்த ஜனாதிபதி தேர்தலில் பல்வேறுபட்ட உள்ளக அரசியலும், வெளிநாட்டு கரங்களும் முட்டி மோதின, மிகக் கடுமையாக வேலை செய்தன. அமெரிக்கா சார்ந்த மேற்குலகமும் அதன் நிறுவனங்களும் ரணிலின் பின்னே நின்றன. அண்டை நாடு சஜித் பிரேமதாசவை முன்னிறுத்த விரும்பியதாகச் சொல்லப்படுகிறது. இவர் போட்டியிலிருந்து விலக அழகப்பெருமவை முன்னிறுத்தினர்.
இலங்கையின் அரசியல் மோதல்களில் வெளிச்சக்திகள் தமக்கிடையே நேரிடையாக மோதிக்கொள்ளாவிட்டாலும் அவை தத்தமக்குரிய பங்கையும் பாத்திரத்தையும் பெறுவதற்காக கடும்பிரயத்தனம் செய்தன. அவை தமக்குரிய நலன்களை பெறுவதற்கு தாம் விரும்பியவர்களை முன் கொண்டுவர கடுமையாக உழைக்க தவறவில்லை.
இந்த உள்ளக ஜனாதிபதித் தேர்தல் என்பது விலைபோன, விலை நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் என்றுதான் சொல்ல வேண்டும். இங்கே ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவரவர் தகுதிக்கும் அவரவர் செல்வாக்கும் ஏற்ற வகையான விலை நிர்ணயம் செய்யப்பட்டது. சுருங்கச் சொன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடித்தது யோகம். அவரவர் தகுதிக்கேற்ப பணப் பெட்டிகளின் அளவு நிர்ணயம் பெற்றுவிட்டது.
இந்தத் தேர்தலில் பல வெள்ளாடுகள் கறுத்தாடுகளாகவும் வெள்ளாடுகள் ஆகவும் மாறி செயல்பட்டதையும் காணமுடிகிறது. ஆனாலும் இந்த அனைத்து விலை நிர்ணயங்களையும், வெளிச்சக்திகளுடைய பலத்தையும், பணத்தையும் ஒரே திசையில் குவித்து தனக்கு எதிராக இருக்கக்கூடியவர்களை தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான பாதுகாப்பரனாக மாற்றி தனக்கு சேவகம் செய்ய வைத்த அரசியல் விந்தைதான் சிங்கள ராஜதந்திரத்தின் அதி உச்சம் எனலாம்.
ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி
““ஒரு செயல் அது தரவல்ல விளைவுகளிலிருந்தே எடைபோடப்பட வேண்டும்““ ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி என்பது ரணிலுக்கு மாத்திரமல்ல. அது ராஜபக்சக்களுக்கு அரண் அமைத்து, பாதுகாப்பளிக்கின்ற வகையில் ராஜபக்சக்களின் வெற்றியாகவும் அமைந்தது என்பதை பலரும் கவனிக்க தவறுகின்றனர்.
உண்மையில் ரணில் விக்ரமசிங்க பதவியில் அமர்ந்தது என்பது அவருடைய அரசியல் பலத்தை உயர்த்தினாலும் கூட அது இன்னொரு வகையில் ராஜபக்ச குடும்பத்தையும், அவர்களுடைய அரசியல் வாழ்க்கையையும் பாதுகாத்து உறுதிப்படுத்தியது என்று கொள்ளவேண்டும்.
ராஜதந்திரத்தில் எதிரியை தனக்கு சேவகம் செய்ய வைப்பது என்ற வித்தையில் தனக்கு எதிராக நின்ற சஜித் பிரேமதாசவையும் சேவகம் செய்ய வைத்தார் ரணில். கூடவே தனக்கு எதிராக இருந்த அண்டை நாட்டையும் சேவகம் செய்ய வைத்தார்.
ஜனாதிபதி தேர்வு விடயத்தில் ராஜபக்ச குடும்பம் மிகத் தெளிவாக இருந்தது. ரணில் விக்ரமசிங்காவை பதவியில் அமர்த்துவதன் மூலம் தங்கள் குடும்பத்தின் நாமல் ராஜபக்சவின் சிம்மாசனத்தை தொடர்ந்து தக்க வைக்க முடியும்.
இரண்டாகத் தோன்றினாலும் இருவரும் ஒன்றே
எனவே அதற்கேற்ற காய் நகர்த்தல்களில் அவர்கள் ஈடுபட்டனர். அதற்கு அமைவாகத்தான் ரணிலை முன்னிறுத்தியதோடு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு பலமான எதிரி முளைத்து விடக்கூடாது என்பதில் அவர்கள் கரிசனையாக இருந்தார்கள். அதன் அடிப்படையில்தான் அவர்கள் முன்கூட்டியே மந்திராலோசனை நடத்தி ராஜபக்சக்களின் ஒன்றுவிட்ட சகோதரனான டலஸ் அழகப்பெருமவை தமது கட்சியில் இருந்த ஒரு பகுதியினர் முன்னிறுத்துவதாக ஒரு அரசியல் போக்கை காட்டினார்கள்.
அந்த அரசியல் போக்கை உண்மையானதென அனைவரையும் நம்பவும் வைத்தார்கள். ஆனால் இங்கே ரணிலும் அழகப்பெருமவும் வேறுவேறாக இரண்டாகத் தோன்றினாலும் இருவரும் ஒன்றே. உள்ள பொருள் ஒன்றுதான் வேதாந்தத்தில் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறுவேறாகத் தோன்றினாலும் இரண்டும் ஒன்றே என அத்வைதம் கூறுகிறது. அவ்வாறுதான் ரணில் விக்ரமசிங்கவும் அழகப்பெருமவும் இரண்டாகத் தோன்றினாலும் இருவரும் ஒன்றே. அது ராஜபக்சக்களின் அரசியல் முகமே என்பதுதான் உண்மையானது.
அழகப்பெருமவை முன்னுறுத்தியவுடன் அழகப்பர்மாவுக்கு ஆதரவளிப்பதாக சஜித் பிரேமதாச முன் வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்கனவே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறிய அரசியல் கட்சிகளும் சஜித் பிரேமதாசவின் பின்னே அழகபெருமவுக்கு ஆதரவளிப்பதான நிலை தோன்றியது.
இங்கே ரணில் விக்ரமசிங்கவின் ராஜதந்திரம் தொழிற்பட்டது மிகவும் விந்தையானது. தனக்கு எதிரானவர்களை ஒன்று திரட்டி தனது வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட காப்பர்னான அழகுப்பெருமவிடம் குவியவைத்தார். அதே நேரத்தில் அழகப்பெருமவை முன்னிறுத்திவர்கள் யாவரும் தாம் ஒன்று திரண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வைக்கப்பட்டனர்.
எதிரியை தனக்கு சேவகம் செய்ய வைக்கும் இலக்கு
இங்கே எதிரிகளின் வாக்குகளையும் தனது வாக்காக மாற்றிவிட்டார். அதாவது அழகப்பெருமவுக்கு வாக்களித்ததன் மூலம் சஜித் பிரேமதாசவையும், அவருடைய அணியினரையும், கூட்டமைப்பினரையும் இவர்களுக்கு பின்னே நீண்டிருந்த அனைவரையும் தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு காப்பர்னாக பயன்படுத்தி எதிரியை தனக்கு சேவகம் செய்து வைத்துவிட்டார்.
இந்த ஜனாதிபதி தேர்தல் அரசியலில் அதிசயத்தை நிகழ்த்தி சிம்மாசனத்தில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்க எடுக்கப்போகும் அரசியல் நடவடிக்கைகள் என்ன அவருடைய அரசியல் நடவடிக்கைகள் தமிழர்களுக்கான அரசியல் எதிர்காலம் இவ்வாறு இருக்கும் என்பதையும் கவனிக்கவேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அழகப்பெருமவுக்கு வாக்களித்தது என்பது பொதுஜனபெரமுன கட்சிக்கு வாக்களித்ததாகும். பொதுஜனபெரமுனவுக்கு வாக்களித்ததன் மூலம் முள்ளிவாய்க்கால் படுகொலையை நிகழ்த்திய அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததாகவும் அமைந்தது.
எனவே இனப்படுகொலை நிகழ்த்தியவர்களுக்கு வாக்களித்து சாமரம் வீசி எதிரிக்கு துணை போய்விட்டனர். அதேநேரத்தில் ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் அமர்வதற்கும் இவர்கள் அழகப்பெருமவுக்கு வாக்களித்து உறுதிப்படுத்திவிட்டனர்.
போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணை
எனவே ரணிலின் வெற்றிக்கும் இவர்கள் மறைமுகமாக சேவகம் செய்திருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க மறுகனம் சர்வதேச அரசியல் களத்தில் தமிழர்கள் தமக்குரிய நிலையை சற்று தவறவிட்டிருக்கிறார்கள். போர்க்குற்றம், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றிற்கான நீதி விசாரணை நடைமுறைகள் இனி சற்று பின்தள்ளிச் செல்லும்.
தமிழ் மக்கள் பேரம் பேசலுக்கான களத்தை இழந்து இருக்கிறார்கள். இனி புதிய சூழலில் புதிய களம் ஒன்றை திறப்பதற்கான அரசறிவியல் வியூகம் தேவையாக உள்ளது. அரசறிவியல் அறிஞர்கள் கடினமாக உழைக்க வேண்டிய காலச் சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தையும் அரச படைகளையும் பாதுகாப்பதற்கு ராஜதந்திர நடவடிக்கை அனைத்தையும் கனகச்சிதமாக ரணில் விக்ரமசிங்க செய்ய வல்லவர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசியலில் நீதி, நியாயம், தர்மம் என்ற பேச்சுக்கு இடமில்லை அதிகாரமும் பரஸ்பர நலன்களும் அவரவர் பங்கும் பாத்திரமும் தான் முக்கியமானது.
எனவே ஈழத் தமிழ் மக்களுடைய நீதிக்கும்,நியாயத்துக்கும் அப்பால் மேற்குலக நலன்கள் பூர்த்தி செய்யப்படுகின்ற போது தமிழர் நலன் கிடப்பில் போடப்பட்டுவிடும் என்பது தான் கவலைக்குரிய நடைமுறை யதார்த்தமாகும்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
