தினேஷ் சாப்டர் மரணத்தில் தொடரும் மர்மம்! மருத்துவ அறிக்கையில் ஏற்பட்டுள்ள குழப்பம்
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் அடையாளம் காணப்படாத நிலையில், தினேஷ் சாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
டி.என்.ஏ. விசாரணை
இந்நிலையில், தினேஷ் சாப்டரின் மரண இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அவரது டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கைகளின்படி, அவரது உயிரியல் மாதிரிக்கு மேலதிகமாக, அரசாங்க அறிக்கையில் மற்றுமொரு உயிர் மாதிரி இருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் பயன்படுத்திய தண்ணீர் போத்தல், கழுத்தில் இருந்த கேபிள் வயர், கைகள் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஜிப் டை ஆகியவற்றில் மற்றுமொரு உயிரியல் மாதிரி இருந்ததாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், தினேஷ் சாப்டரின் உடல் உறுப்புகளின் மாதிரிகளை நீதிமன்றத்திற்கு அறிவிக்கும் வரை கொழும்பு பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகளின் வசம் வைத்திருக்குமாறும் அவற்றை அழிக்க வேண்டாம் எனவும் நீதவான் பிரதம சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் டி.என்.ஏ. விசாரணைக்காக அவர்களை அரசு ஆய்வாளர் அலுவலகத்திற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையில் சிக்கல்
இதன்பிரகாரம், பொரளை மயானத்தின் ஊழியர்கள் இருவர், மருதானை பொலிஸ் பிரிவின் SOCO அதிகாரிகள் மற்றும் சாப்டர் படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று அந்த இடத்தில் இருந்த நான்கு பேரின் டி.என்.ஏ. அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் சாப்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற படுக்கை மேசையின் எண்ணிக்கை குறிப்பிடப்படாததால், அவை தொடர்பான அறிக்கை ஆவணங்களை வழங்குமாறு தேசிய மருத்துவமனைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை உடனடியாக நீதிமன்றில் சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனையில் சிக்கல் இருப்பதாகவும், அதில் மற்றுமொரு உயிரியல் மாதிரி இருப்பதாகவும் தெரியவந்துள்ளதால், இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறும் குற்றப்புலனாய்வுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.