தீவிரமடையும் தினேஷ் சாப்டர் கொலை விசாரணை! மூடிய அறையில் சகோதரரிடம் சாட்சியம் பதிவு
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், தினேஷ் ஷாப்டரின் சகோதரர்களில் ஒருவரிடமிருந்து இன்று சுமார் 45 நிமிடங்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொலை சம்பவம் தொடர்பான விசாரணை
தினேஸ் ஷாப்டரின் மரணம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட நீதவான் விசாரணை இன்று இரண்டாவது நாளாகவும் கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரியவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், உத்தியோகபூர்வ அறையில் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டமையினால் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து கொலைச் சம்பவம் தொடர்பில் பலரிடம் பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.



