தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கயைம, ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக இருந்த தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டையை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.
கைத்தொலைபேசி மற்றும் சிம்கார்டை விசாரணைக்காக அரசாங்க பரிசோதகர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
தினேஷ் ஷாப்டரின் மரணத்துக்கான காரணம் இதுவரை வெளிவராத நிலையில், இறந்தவர் பயன்படுத்திய தொலைபேசி இலக்கத்தை வழங்குமாறு அவரது மனைவி விடுத்த கோரிக்கைக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.
இரண்டாவது பிரேத பரிசோதனை
இந்த தொலைபேசியில் மரணம் தொடர்பான சமூக ஊடக தரவு அறிக்கைகள் மற்றும் தொலைபேசி பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பகுப்பாய்வு அறிக்கைகளுக்காக தொலைபேசி தற்போது மரண விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் இரண்டாவது பிரேதப் பரிசோதனை காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்ற நிலையில், சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட பாகங்கள் அரசாங்க பரிசோதனையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |