திருகோணமலையில் விசேட சோதனை நடவடிக்கை: இளைஞன் கைது .
தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தினிபுரம் பிள்ளையார் கோவில் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(11.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்று மாலை கந்தளாய் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பத்தினிபுரம் கிராமத்தில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கைது
இதன் போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபரை வழிமறித்து சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 08 கிலோ 650 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 32 வயதுடையவர் என்றும், அவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை மேலதிக விசாரணைகளுக்காக தம்பலகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேக நபரை கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.