கொழும்பில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்! அறையில் சிக்கிய முக்கிய ஆதாரங்களில் திடீர் திருப்பம்
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது, அங்கு பணியாற்றிய தாதிகள் உட்பட பத்து ஊழியர்களின் DNA அறிக்கையை பெற நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல்.இளங்கசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அரச இரசாயனையாளருக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பாக அரசு மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பப்பட்ட வழக்குப்பொருட்களில் இரண்டு வெளிநாட்டு உயிரியல் மாதிரிகள் (டிஎன்ஏ) இருப்பதும் தெரியவந்துள்ளது.
தினேஷ் ஷாப்டரின் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட கேபிள், அவரின் கைகளை கட்டியிருந்த சீட்டு டேப் மற்றும் அவர் பயன்படுத்திய தண்ணீர் போத்தல் ஆகியவற்றில் இந்த வெளிநாட்டு (டி.என்.ஏ ) மாதிரிகளை அரச பரிசோதகர் அடையாளம் கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத்திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
விசாரணையில் வெளியான தகவல்
அதன்படி, அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கைகளை பரிசோதிக்க சம்பந்தப்பட்டவர்களை அழைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் DNA அறிக்கையை வரவழைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.