தினேஷ் ஷாப்டர் மரணத்தில் தொடர் திருப்பம்! பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்க மறுத்த குடும்பத்தினர்
கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மரணம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடான சூழல் நிலவுவதாக தினேஷ் ஷாப்டரின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இன்று (09) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் சயனைட் உட்கொண்டதால் உயிரிழந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில்,சம்பவம் தொடர்பான வழக்கு இன்று புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரேத பரிசோதனையில் முரண்பாடு
இதன்போது மரணத்திற்கான காரணம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கை முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக ஷாப்டர் சார்பில் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுடன் சயனைட் உட்செலுத்தப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள போதிலும், உயிரிழந்தவரின் சடலத்தின் குணாதிசயங்களை ஆராயும் போது அது தொடர்பில் ஒரு முடிவுக்கு வருவது சிக்கலாக உள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான முரண்பாடுகள் காரணமாக, பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்க மறுப்பதாக ஷாப்டரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இறுதி விசாரணை அறிக்கை
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இறுதி விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 8 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இறுதி விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர், இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் உத்தரவை அறிவிப்பதாக நீதவான் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.