கொழும்பில் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் வர்த்தகர்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பில் தோண்டி எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய நேற்று (19.05.2023 ) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐவரடங்கிய விசேட வைத்தியக்குழு, சடலத்தை மீட்கும் போது, அவர்களின் பயண வசதிகள், தங்குமிட வசதிகள் மற்றும் உள்ளூர் நலன்கள் அனைத்தையும் மேற்கொள்ளுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு மற்றுமொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சடலத்தை தோண்டியெடுக்க கோரிக்கை
தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு அவரது சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என ஐவர் அடங்கிய விசேட வைத்திய சபையினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் எழுத்துமூல கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதனை தொடர்ந்து தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |