தினேஷ் சாப்டர் வழக்கின் அடுத்த நகர்வு
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை, 2024 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை இன்று காலை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்சன கெகுனாவெல முன்னிலையில் இடம்பெற்றது
இதன்போது, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்பில் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்தனர்.
இதேவேளை, பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள கைத்தொலைபேசிகளில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் படங்கள் போன்ற இரகசிய தகவல்கள் உள்ளன.
எனவே குறித்த கையடக்கத் தொலைபேசிகளை மீட்டெடுக்க அவரின் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கை
இது தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கேட்டறிந்த மேலதிக நீதவான், குறித்த கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பான அரச பகுப்பாய்வாளரின் அறிக்கையைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அறிவித்தார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை 2024 ஜூலை 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனசக்தி பிஎல்சி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் சாஃப்டர், 2022 டிசம்பர் 15 அன்று பொரளை பொது மயானத்தில், அவரது காரில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர், கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருநாளில் உயிரிழந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |