பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மர்ம மரணம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மர்ம மரணம் தொடர்பான அரச பகுப்பாய்வாளரின் அறிக்கையை, இந்த மரணம் தொடர்பாக புதிதாக பிரேத பரிசோதனை செய்ய நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர்கள் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நீதிமன்ற பதிவாளருக்கு இன்று இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினேஷ் சாப்டரின் குடும்ப நலன்களை அவதானித்த சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஐவர் கொண்ட குழு
பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, தற்போது புதிதாக பிரேத பரிசோதனை செய்து வரும் சட்ட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களின் பார்வைக்காக அரசாங்க பகுப்பாய்வாளரின் கண்டுபிடிப்புகளை அனுப்ப வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
பெப்ரவரி 27 அன்று, தொழிலதிபர் தினேஷ் சாப்டரின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பதை அறிய, அவரது மரணம் குறித்து புதிதாக பிரேத பரிசோதனை செய்ய ஐந்து பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவை நீதிமன்றம் நியமித்திருந்தது.
தொழிலதிபர் தினேஷ் சாப்டரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய புதிய விசாரணையை மேற்கொள்ள இந்த ஐந்து பேர் கொண்ட குழு பணிக்கப்பட்டுள்ளனர்.