தினேஷ் ஷாப்டர் கொலை தொடர்பில் சில தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது! பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தகவல்
ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் 50க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகம் உள்ளவர்களிடம் இருந்து இரண்டாவது தடவையாக வாக்குமூலங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, தினேஷ் ஷாப்டரை தனிமையில் சந்திக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் தினேஷ் ஷாப்டர் பொதுவாக மெய்பாதுகாவலர்கள் இன்றி பயணிக்கும் இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொலையின் பின்னணியில் நெருங்கிய சகா இருக்கலாம் என பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், கொலையுடன் நேரடி தொடர்புள்ள சந்தேக நபர், இன்னும் கைது செய்யவோ அல்லது அடையாளம் காணவோ இல்லை என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சாப்டரின் மனைவி மற்றும் அவரது செயலாளரின் அறிக்கைகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக வெளியான செய்திகளின் படி அவ்வாறு முரண்பாடுகள் இருந்தால், அந்தத் தகவலை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பான விசாரணை
கொலை செய்யப்பட்ட தினத்தன்று, தினேஷ் ஷாப்டர், கொழும்பு-07, இருந்து பொரளை மயானத்திற்குச் சென்ற போது உணவகம் ஒன்றில் இரண்டு பேருக்கு சிற்றுண்டிகளை எடுத்துச் சென்றமை தொடர்பிலும் விசாரணைக் குழுக்கள் கவனம் செலுத்தியுள்ளன.
மயானத்திற்குச் செல்வதற்கு முன் வேறு இடத்தில் தின்பண்டங்களைச் சாப்பிட்டதற்கான ஆதாரம் இருப்பதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் அவருடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தவர்களும் விசாரிக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தக விவகாரங்களுக்குத் தொடர்ந்து ஆலோசனை வழங்கியவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பகுப்பாய்வு அறிக்கை
இதேவேளை, தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கொழும்பு மேலதிக நீதவான் ஷிலானி பெரேரா (21) உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.தினேஷ் ஷாப்டரின் மனைவியான தனி ஷாப்டர், நிறுவனத்தின் பணிப்பாளர், அலுவலக உதவியாளர் மற்றும் கிறிஸ் பெரேரா ஆகியோரின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 16 ஆம் திகதி வரை அவர்களது தொலைபேசி அழைப்புகள் மற்றும் பெறப்பட்ட அழைப்புகள் தொடர்பாக தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
