இலங்கையில் நவீன தேசியக்கொள்கையை வலியுறுத்தும் திலித் ஜயவீர
மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, "நவீன தேசியம்" என்ற கருத்தை தமது தலைமையிலான கூட்டமைப்பின் முக்கிய மையமாக எடுத்துரைத்துள்ளார்.
இதன் மூலம் பெரும்பாலும் இனவாதம் மற்றும் இனப் பிரிவினையுடன் தொடர்புடைய பாரம்பரிய விளக்கங்களிலிருந்து விலகிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தேசியவாதம் என்று கூறும்போது இளைஞர்களின் மனதில் இருக்கும் பிம்பம் இன்னும் பாரம்பரியமாக உள்ளது. ஆனால் நான் இந்த வார்த்தையை நவீன தேசியவாதம் என்று மறுபெயரிட விரும்புகிறேன்,
ஏனெனில் இது மிகவும் பொருத்தமானது என்று ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
நவீன தேசியவாதம் என்பது ஒரு உலகளாவிய நிகழ்வாகும், இதனடிப்படையில் நாடுகள் தங்கள் வளங்களை தேசிய வளர்ச்சிக்காக திறம்பட பயன்படுத்துகின்றன. இது இலங்கையில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவீன தேசியவாதம் என்பது நாட்டின் வளர்ச்சியை, அதிகபட்ச திறனை அடைய வளங்களை நடைமுறை வழியில் பயன்படுத்துகிறது. இது அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பயன்படுத்தப்படுகிறது,
இதுவே மோடியின் பிரசாரத்தின் முழக்கமாகவும் உள்ளது. இந்த அணுகுமுறை இலங்கையிலும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் என நம்புவதாக ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் கூட்டணி
இந்தநிலையில் தவறான எண்ணங்களைத் துடைத்து, கடந்த காலப் பிளவுகளைக் களைவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். சில குழுக்கள் தேசியவாதத்தின் வரையறையை தவறாகப் புரிந்து கொண்டுள்ளன.
எனவே அந்த தவறான எண்ணங்களை நீக்கி, இனவெறி மற்றும் வேறுபாடுகளை முறியடிக்கும் தமது கருத்தை அறிமுகப்படுத்த தாம் முயற்சிப்பதாக திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்
மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, 'சர்வ ஜன பலய' (சர்வசன அதிகாரம்) என்ற புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பதற்கான கொள்கை உடன்படிக்கையை பல அரசியல் குழுக்களுடன் இணைந்து கடந்த திங்கட்கிழமை கொழும்பில் செய்து கொண்டார்.
தேசிய சுதந்திர முன்னணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும், பிவித்துரு ஹெல உறுமய சார்பில் உதய கம்மன்பிலவும், யுதுகம தேசிய அமைப்பு சார்பில் கெவிந்து குமாரதுங்கவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச செய்தியாளர்களிடம் பேசுகையில்; நாங்கள் அனைவரும் இங்கு தலைவர்கள், எனவே "எங்களில் மிகவும் பொருத்தமானவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |