கட்டையடம்பன் மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் திலீபன் எம்.பி வழங்கியுள்ள உறுதி
மன்னார், செட்டியார் கட்டையடம்பன் மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் தீர்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்(Kulasingam Thileepan) தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் (Douglas Devananda) தலையீட்டையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மட்டுவில் ஸ்கந்தவரோதயா மகா வித்தியாலயத்தில் இன்று (12) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மேய்ச்சல் நில பிரச்சினை
முன்னதாக 500 போலியான அனுமதிப்பத்திரங்களுடன் 600 ஏக்கருக்கு மேலான வயல் நிலங்களை கையகப்படுத்தியுள்ள 15 நபர்கள் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.
இந்நிலையில், குறித்த நபர்களிடமிருந்து இக்காணிகளை மீட்டு மேய்ச்சல் நிலமாக மாற்றுவதை பிரதான இலக்காக கொண்டு அண்மையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேரடி விஜயம் மேற்கொண்டு முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் நீர்ப்பாசன பணிப்பாளர் ஆகியோரோடு தொலைபேசி ஊடாக முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பாக கேட்டறியப்பட்டது.
அதன்படி, தொடர்ந்தும் நாம் எடுத்த முயற்சியின் பலனாக குறித்த காணிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் நீர் வாய்க்கால் அடைக்கப்பட்டது.
இதேவேளை, வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுடன் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் வெளிப்படைத்தன்மையுடன் மாவட்டத்தின் துறைசார் அதிகாரிகள் இருப்பார்கள் என்று கால்நடை வளர்பாளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர், அவர்களின் நம்பிக்கை வீண்போகாது" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |