நாடு முழுவதும் டீசல் நெருக்கடி! பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுமென அவசர எச்சரிக்கை
லங்கா ஐஓசி நிறுவனம், ஆர்.எம். பார்க் நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனம் ஆகியவற்றால் டீசல் விநியோகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாடு முழுவதும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
தற்போது, பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 650 எரிபொருள் நிலையங்களில் மட்டுமே டீசல் விநியோகிக்கப்பட்டு வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலைய விலைகள்
அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களில் விலைகள் குறைக்கப்படும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதே அளவிற்கு எரிபொருள் விலையை குறைக்கின்றன.

தங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை ஈடுகட்ட அந்த தொகையை வழங்குவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டு, நிறுவனங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதாக இந்த நிறுவனங்கள் கூறுகின்றன.
இருப்பினும், ஒப்புக்கொண்டபடி அரசாங்கம் அந்த தொகையை வழங்கத்தவறியதே எரிபொருள் விநியோகக் கட்டுப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது என்று நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான 250 எரிபொருள் நிலையங்கள், சினோபெக் நிறுவனத்திற்குச் சொந்தமான 150 எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனத்திற்குச் சொந்தமான 100 எரிபொருள் நிலையங்கள் டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
இந்த நிறுவனங்கள் டீசல் விநியோகத்தை தொடர்ந்து கட்டுப்படுத்தினால், எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பாக பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம் கடிதம்
இதற்கிடையில், லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம், லங்கா ஐஓசியின் நிர்வாக பணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில்,
செப்டம்பர் 3 ஆம் திகதி முதல் விநியோகஸ்தர்களுக்கு ஆட்டோ டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் சமீபத்திய முடிவு, போக்குவரத்து, தொழில்துறை, நகர கட்டுமானம் மற்றும் பிற அத்தியாவசிய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாததால், விநியோகஸ்தர்களுக்கு ஏற்கனவே கடுமையான சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் ஏனைய விநியோகஸ்தர்களுக்கு மாறிவிட்டால், அவர்களின் வணிகத்தை மீண்டும் பெறுவது மிகவும் கடினமாகிவிடும் என்றும், இவை விநியோக வலையமைப்பு மற்றும் டீசல் விற்பனையில் நீண்டகால பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பாக பொருத்தமான வழிமுறையை வகுக்குமாறு லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.