ஆசிரியர்கள் உடன் சம்பள உயர்வை கோரவில்லை! கஜேந்திரகுமார் எம்.பி
ஆசிரியர்கள் உடனடியாக சம்பள உயர்வினை வழங்குமாறு கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டில் தற்போதைய ஆட்சியாளர்களினால் நியமிக்கப்பட்ட சுபோதினி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்க வேண்டுமெனவே கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் பெருந்தொற்று நிலைமைகளினால் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமற்றதாக சிலவேளைகளில் தென்படாலாம் என்ற போதிலும், அவர்கள் உடன் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு கோரவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என்பதனை அரசாங்கம் ஏற்க வேண்டுமெனவும், குறிப்பிட்ட திகதியில் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் உறுதிமொழி வழங்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.