டிக்கோயா இரட்டைக் கொலை: ஆறு மாதங்களின் பின் யாழில் சிக்கிய பிரதான சந்தேக நபர்
டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், நீண்டகாலமாக தலைமறைவாகியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசி ஒன்றை விற்பனை செய்வதற்காக வந்திருந்த நிலையில், கிளிநொச்சி பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி குமாரவேல் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கடந்த 02ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபர் கடந்த 03ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபருக்கு எதிராக நுவரெலியா, ஹட்டன் மற்றும் குருநாகல் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், நுவரெலியா நீதிமன்றத்தினால் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் இருவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த 37 வயதுடைய மனோஜ் அல்லது மனோஹரன் என அழைக்கப்படும் சந்தேக நபர், முன்னதாக கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறைச்சாலை பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
உடல்நலக் குறைவு
பதுளை – தெமோதரையைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், இதற்கு முன்னர் பொகவந்தலாவை பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். பின்னர் அவர் கண்டி – பல்லேகலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறைச்சாலை பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் பல்வேறு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், சுமார் ஆறு மாதங்களாக தலைமறைவாகியிருந்த சந்தேக நபர், தற்போது யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.