புலம்பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்: டக்ளஸ் சுட்டிக்காட்டு
என்மீதுள்ள அரசியல் பயம் காரணமாகத்தான் டிஎன்ஏ(TNA) என்ற ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கட்டியெழுப்பினார் என்றும், புலம்பெயர் தமிழர்கள் அவருக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற விசேட மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரின் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“வடக்கிற்கு விஜயம் மெற்கொண்டிருந்த சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் 13ம் திருத்தம் மற்றும் அதற்கு மேல் என பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர்
ஆயுதப் போராட்டம்
வடக்கினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அதற்கு என்ன கூறுகின்றீர்கள் என என்னிடம் சில ஊடகவியலாளர் வினவினார்.
நான் வடக்கு என்று சொல்லமாட்டேன். தமிழ் மக்களை, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறவன் என்றே கூற விரும்புகி்றேன்.
நாங்கள் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்த வேளையில் வட கிழக்கு மலையகம் உள்ளடங்கலாக தமிழ் பேசும் மக்கள் என்ற கோசத்தை முன்வைத்துதான் போராட்டத்தை தொடங்கினோம்.
இடையில் அந்த போராட்டம் தவறான வழிநடத்தல்கள், அணுகுமுறைகள் காரணமாக பலவீனப்பட்டு திசை திரும்பிவிட்டது. இந்த நேரத்தில்தான் எங்களிற்கான பொன்னான வாய்ப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தம் எமது கைகளிற்கு கிடைத்தது. அதனை முதலில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் துரதிஸ்டவசமாக ஈபிடிபியைத் தவிர பொதுவாக எல்லாரும் அதை நிராகரித்தார்கள்.
ஈபிடிபி வெளிப்படையாக இதுதான் எமது மக்களிற்கான தீர்வாக இருக்குமென்று அன்றிலிருந்து சொல்லி வந்தது. உங்கள் கேள்யின்படி வட இலங்கைக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூன்று முக்கியமான தலைவர்கள் வந்திருந்தார்கள்.
தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்களெல்லாம் 13ம் திருத்த சட்டத்தில் தருவீர்களா? அரைவாசியா முக்கால்வாசியா முழுவதும் தருவீர்களா என்றெல்லாம் வெட்கம்கெட்டத்தனமாக அவர்கள் கதைக்கின்றார்கள்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |