பிரித்தானிய பிரஜையான டயனா கமகேவுக்கு எப்படி ராஜாங்க அமைச்சர் பதவியை வழங்க முடியும்-ஆனந்த சாகர தேரர் கேள்வி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்ட டயனா கமகே இலங்கை பிரஜையல்ல எனவும் அவர் சட்டவிரோத ஆவணங்கணை சமர்ப்பித்து இலங்கையில் தங்கி அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் பாஹிங்கல ஆனந்த சாகார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆனந்த சாகர தேரர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இரண்டு பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள்
இரண்டு பிறப்பத்தாட்சி பத்திரங்கள், இரண்டு தேசிய அடையாள அட்டைகளை கொண்டிருக்கும் டயனா கமகே என்ற மோசடியான பெண்மணிக்கு ராஜாங்க அமைச்சர் பதவியை எப்படி வழங்கினீர்கள் என ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புகிறோம்.
டயனா கமகே என்பவர் இலங்கை பிரஜையல்ல. அவர் பிரித்தானிய பிரஜை. அவருக்கு இரட்டை குடியுரிமை இல்லை. அவருக்கு பிரித்தானிய குடியுரிமையே இருக்கின்றது.
அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. போலி ஆவணங்களை சமர்ப்பித்தமை தொடர்பாக டயனா கமமேவுக்கு எதிராக நாங்கள் உடனடியாக நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளோம்.
டயனா கமகே விசா அனுமதியின்றி இலங்கையில் தங்கி இருக்கின்றார்
டயனா கமகே, இலங்கை வருவதற்காக பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் விசா அனுமதிகளையும் பெற்றுக்கொண்டுள்ளார். தற்போது விசா அனுமதியின்றி டயனா கமகே இலங்கையில் தங்கியிருக்கின்றனர்.
விசா அனுமதியின்றி, இலங்கையில் தங்கியிருக்கும் டயனா கமகே என்ற பிரித்தானிய பிரஜைக்கு எப்படி ராஜாங்க அமைச்சர் பதவியை வழங்க முடியும் என ஆனந்த சாகர தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.