தனிஸ் அலி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விமானம் மூலம் டுபாய் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்ட தனிஸ் அலி எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
31 வயதான, குருநாகல் வெபாடாவில் வசிக்கும் குறித்த நபர், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு வலுக்கட்டாயமாக நுழைந்து, ஜூலை 13 அன்று ஒளிபரப்புகளை சீர்குலைக்க முயற்சித்தமை தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
அரசுக்கு சொந்தமான ஊடக நிறுவனத்திற்குள் நுழைந்த போராட்டகாரர்கள்
ஜூலை 13 அன்று, அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பான செய்திகளை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று கோரி, தனிஸ் அலி உள்ளிட்ட போராட்டக்காரர்கள் குழு அரசுக்கு சொந்தமான ஊடக நிறுவனத்திற்குள் நுழைந்தனர்.
எதிர்ப்பாளர்களில் இருவர் பின்னர் ஒரு நேரடி நேர்காணலில் தோன்றினர், அதன் பிறகு ஒளிபரப்பு சேவை அதன் நேரடி மற்றும் பதிவுசெய்த ஒளிபரப்பை குறுகிய காலத்திற்கு நிறுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போராட்டக்காரர்களை அடையாளம் காண பொலிஸார் பின்னர் விசாரணைகளை தொடங்கினர்.
நீதிமன்றம் பிடியாணை உத்தரவு
பொலிஸாரால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த ஜூன் 20ம் திகதி நிதியமைச்சகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாக தவறியமைக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அலிக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விமானம் மூலம் டுபாய் செல்ல முற்பட்ட போது தனிஸ் அலி கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.