ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பலவந்தமாக கைது செய்யப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளியான தகவல் (Video)
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றையதினம் டுபாய் செல்லத் தயாராக இருந்த விமானத்திற்குள் நுழைந்த குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று மாலை கொழும்பு - கோட்டை நீதவான் திலினகமகேவின் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்றைய தினம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கருவாத்தோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதவானின் இல்லத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை
கடந்த 13ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறினை ஏற்படுத்த முயன்ற தனிஸ் அலி என்பவரே நேற்றையதினம் டுபாய் செல்லத் தயாராக இருந்த விமானத்தில் ஏறிய நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவித்து பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்திருந்ததுடன், கைது நடவடிக்கைக்கு விமானத்தில் இருந்த ஏனைய பயணிகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இலங்கையில் இருந்து டுபாய் செல்லவிருந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன், இது தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.