தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் கைது
இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரரான சங்கு எனப்படும் சாவித்திர டி சில்வா (Savithra de Silva) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவிலை மருத்துவமனையில் வைத்து அவரைக் கைது செய்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு தரப்பின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர்
நேற்றிரவு சாவித்திர டி சில்வா தனது வீட்டின் அருகில் இன்னொரு நபரைத் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நபர் தனஞ்சய டி சில்வாவின் தகப்பனாரின் கொலையுடன் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டுள்ள குடு அஞ்சு மற்றும் அல்டோ தர்மே ஆகியோரின் நெருக்கமான சகா ஆவார்.
அதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான நபர் சற்று நேரம் கழித்து இந்திக சுரங்க சொய்சா அல்லது ரத்மலானே சுத்தா மற்றும் இன்னும் சிலருடன் சேர்ந்து வந்து தனஞ்சயவின் சகோதரர் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அதன்போது அவர்களில் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் சாவித்திர சில்வாவைத் தாக்கியுள்ளார்.
பொலிஸ் காவலில் சிகிச்சை
காயத்துடன் தனது வீட்டுக்குள் ஓடிச் சென்ற சாவித்திர சில்வா, கூரிய ஆயுதமொன்றை எடுத்து வந்து ரத்மலானே சுத்தாவையும் இன்னொருவரையும் தாக்கியுள்ளார்.
தாக்குதல் காரணமாக காயமடைந்த இரு தரப்பினரும் தற்போது களுபோவிலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இருதரப்பினரையும் கல்கிஸ்ஸை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தற்போது அவர்கள் பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |