தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டமானது, இன்று (16.01.2026)மாலை பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி ஒருங்கிணைப்பில் நடைபெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளி விவகார பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திர தலைமையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
இதன்போது, டிட்வா புயல் காரணமாக திறம்பட பணியாற்றிய சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் பிரதியமைச்சர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் இடம் பெற்றுவரும் முள்ளிப்பொத்தானை தொடக்கம் ஆயிலியடி வரையிலான வீதி அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளரிடம் கட்டளையிட்டுள்ளார்.

மேலும், யானை வேலி பிரச்சினை, பிரதேச கல்வி மற்றும் வீதி உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கடந்தகால அபிவிருத்திகள் தொடர்பான மதிப்பீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சில இடங்களில் சுற்றுலா அபிவிருத்தியை மேம்படுத்தவும் பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறைக்கான குளிரூட்டியை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளன.
இந்நிலையில், தம்பலகாமத்துக்கான தனியார் கல்வி வலயமொன்றை உருவாக்குவது தொடர்பான பிரேரணையும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் கோரிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி, பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், திணைக்கள தலைவர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








