அரச அதிகாரிகள் ஒரு சாராருக்கு ஜனாதிபதி அநுரவின் கடும் எச்சரிக்கை
போதைப் பொருள் உள்ளிட்ட சட்டவிரோத விவகாரங்களுடன் தொடர்புள்ள அரச அதிகாரிகள் தற்போது முதல் அதிலிருந்து விடுபட வேண்டும். அல்லது அரச துறையில் இருந்து பதவி விலக வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
''முழு நாடும் ஒன்றாக'' தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் முயற்சி
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க,
நாட்டில் வியாபித்திருக்கும் போதைப் பொருளை ஒழிக்கும் விசேட வேலைத்திட்டத்திற்காக நாங்கள் இன்று ஒன்றிணைந்திருக்கின்றோம்.
சக்தி மிக்கதும், பலமானதுமான ஒரு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டி எமது அரசாங்கம் தீவிரமாக வேலை செய்து வருகின்றது.

எமது நாட்டில் இருக்கும் பெற்றோர்களுக்கு தங்களுடைய பிள்ளைகள் தொடர்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் இந்த விஷப் போதைப்பொருளால் அந்தக் கனவுகள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன.
இந்தப் போதைப் பொருள் வர்த்தகத்தினால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு இந்த அரசாங்கத்தை வீழ்த்த நினைக்கின்றார்கள். அது எங்களுக்கு தெரியும். கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்குள்ளே இருக்கும் கைதிகள் போதைப்பொருள் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
போதைப்பொருளை ஒழிக்கும் திட்டத்தில் எமது பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும், ஒரு சில பொலிஸார் இதற்கு விதி விலக்காக போதைப் பொருள் வர்த்தகர்களுடன் செயற்படுகின்றனர்.
சுங்கத் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களில் இருப்பவர்களும் இதற்கு இறையாகியிருக்கின்றனர்.
அது மாத்திரமல்ல, அரச துறையிலும் கூட பல அதிகாரிகள் இந்த போதைப் பொருளுக்கு இறையாகியிருக்கின்றனர். கைது செய்யப்பட்டுமிருக்கின்றனர்.
எனவே, நிச்சயமாக எமது அரசாங்கம் இந்த விஷப் போதைப்பொருளிடம் இருந்து எமது நாட்டை காக்க தீவிரமாக போராடி வருகின்றது.
அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
நாட்டில் இந்த அளவுக்கு போதைப் பொருள் வர்த்தகம் வியாபிக்க அரசியல்வாதிகளின் துணை இருந்தது. பல அரசியல்வாதிகளின் பின்னணியில் இந்த போதைப் பொருள் வர்த்தகம் விஷ்வரூபம் எடுத்தது. சில பகுதிகளில் உள்ள அரசியல்வாதிகள் போதைப் பொருளின் பெயரால் அடைமொழி வைத்து அழைக்கப்பட்டார்கள்.
நான் உங்களுக்கு ஒரு உறுதிமொழியைத் தருகின்றேன். போதைவஸ்த்து இல்லாத ஒரு அரசாங்கத்தை கொண்டு செல்ல நாங்கள் முன்னகர்கின்றோம். அதனைத் தொடர்ந்தும் கொண்டுச் செல்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத விடயங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள், பிரதானிகள் பலரும் கூட போதைப் பொருள் விவகாரத்துடன் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். பலர் அடையாளப்படுத்தப்பட்டு தண்டனை வழங்கும் செயன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர்.
சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்களும் இதற்கு இலக்காகியிருக்கின்றார்கள்.
எமது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட இவர்கள் யாருக்குமே போதைப் பொருள் வர்த்தகத்தோடு மற்றும் பாதாள உலக செயற்பாடுகளோடு தொடர்பில்லை என்பதை நான் உறுதியளிக்கின்றேன். இந்த துறை இன்று சுத்தமாக இருக்கின்றது.
ஆனால் இன்னும் ஒரு சில அரச அதிகாரிகள் இதுபோன்ற சட்டவிரோத விவகாரங்களுக்கு துணை போகின்றனர். சில சில இடங்களில் சில சில சம்பவங்களை நாங்கள் கேள்விப் படுகின்றோம். அந்த அனைத்து அதிகாரிகளிடமும் நாங்கள் கேட்பது இதுபோன்ற சட்டவிரோத விடயங்களை தற்போதிலிருந்தே விலக்கி விடுங்கள்.
அவ்வாறானவர்களுக்கு இரண்டு தேர்வுகள் தான் இருக்கின்றன. ஒன்று, போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்பை விட்டுவிடுங்கள். இரண்டாவது, அரச அதிகாரியாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் அரச துறையில் இருந்து பதவி விலகுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.