பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் தேவேந்திரமுனை பெரஹர - குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள்
புதிய இணைப்பு
மாத்தறை, தேவேந்திரமுனை விகாரையில் நடைபெறும் வருடாந்த பெரஹரவிற்காக 650 பொலிஸ் அதிகாரிகளும் 100 பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதற்கு கூடுதலாக, பாதுகாப்பு பணிகளுக்காக புலனாய்வு அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வருடாந்த எசல பெரஹராவின் முதல் நாள் இன்று (23) தொடங்கி, ஜூலை 29 அன்று மாபெரும் பெரஹரவுடன் நிறைவடையவுள்ளது.
காவடி பெரஹராஜூலை 28 அன்றும், ரந்தோலி பெரஹரா ஜூலை 29 அன்றும் நடைபெறும் என பொலிஸ் தெரிவிக்கின்றது.
குறித்த நாட்களில் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் கேட்டுக்கொள்கின்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த பாதுகாப்பு ஏற்பாடு செயல்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மாத்தறை, தேவேந்திரமுனை விகாரையின் 769வது பெரஹர ஊர்வலம் இன்று (23) பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் என 500 பேர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேவேந்திரமுனை துப்பாக்கிச்சூடு
குறித்த விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்றுமுன் தினம் (21) இரவு துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிசென்ற நிலையில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியிருந்தது.

கடற்தொழிலில் ஈடுபடும் நபரொருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த துப்பாக்கிச்சூடானது 'தெஹிபாலே மல்லி' எனும் நபரின் தரப்பினரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
தெஹிபாலே மல்லி' மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகிய திட்டமிட்ட பாதாள உலகக்குழுக்கள் இம்மோதலுக்குப் பின்னணியில் இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தேவேந்திரமுனை விகாரை பெரஹரவில் கலந்துகொள்ளும் காவடி நடனக்குழுக்களை குறைப்பது தொடர்பாக கஞ்சிபானை இம்ரானால் பயன்படுத்தப்படும் 'KPI' என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் பரவியிருந்தது.
சந்தேகநபர் வந்த கார் மீட்பு
இந்நிலையிலேயே, குறித்த விகாரைக்கு சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றிற்கு காரில் வந்து நபர் துப்பாக்கிச்சூட்டை நடத்தி தப்பிச்சென்றமை அருகில் இருந்த சிசிடிவி (CCTV) கமராவிலும் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து துப்பாக்கிதாரி தப்பிச்சென்ற கார் திக்வெல்ல பகுதியில் வைத்து நேற்று (22) இரவு கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள தேவேந்திரமுனை விகாரை பெரஹரவிற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (23) ஆரம்பமாகும் பெரஹர நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 05 திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் என 500 பேர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.