வடக்கு- கிழக்கு மற்றும் வடமத்திய மருத்துவமனைகள் அபிவிருத்தி
சுமார் ஏழாயிரம் மில்லியன் ரூபா செலவில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மருத்துவமனை அபிவிருத்திகளுக்கான செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி, சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், 7,148 மில்லியன் ரூபாய் செலவிலான புதிய வைத்தியசாலைக் கட்டடங்களுக்கு நாளை (16) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவராண்மை (JICA) மற்றும் இந்திய அரசாங்கத்தின் கடன் உதவிகளின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அங்குரார்ப்பணம்
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இதய நோய் சிகிச்சைக்காக 3,545 மில்லியன் ரூபா செலவில் 8 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது.
இதில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், இதய பரிசோதனை ஆய்வகங்கள் (Catheter labs), நவீன பரிசோதனைக் கூடங்கள், எக்ஸ்-ரே மற்றும் ஈ.சி.ஜி (ECG) வசதிகள் உள்ளிட்ட பல நவீன கட்டமைப்புகள் இடம்பெறவுள்ளன.

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் JICA நிதியுதவியின் கீழ் 2,403 மில்லியன் ரூபா செலவில் 8 மாடிகளைக் கொண்ட அதிநவீன இதய நோய் சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியின் கீழ் 600 மில்லியன் ரூபா செலவில் அதிநவீன அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவு வளாகம் அமைக்கப்படவுள்ளது.
அவசர சிகிச்சை
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைபயில் நோயாளர்களின் நெரிசலைக் குறைக்கும் வகையில், இந்திய நிதியுதவியின் கீழ் 600 மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகளைக் கொண்ட புதிய விடுதிக் கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இத்திட்டங்கள் நிறைவடையும் போது, கொழும்பு வரை செல்ல வேண்டிய அவசியமின்றி, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பொதுமக்கள் தங்கள் சொந்தப் பகுதிகளிலேயே நிபுணத்துவ இதய நோய் மற்றும் அவசர சிகிச்சைகளை விரைவாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.